யாப்பு

ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியம் (வரையறுக்கப்பட்டது) – ETAA (Ltd.)

முகவரி: இல. 330, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.

யாப்பு (அமைப்பு விதிகள்)

1. பெயர்

இச்சங்கம் ‘ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியம்’ (வரையறுக்கபட்டது) எனப் பெயர் பெறும். ‘ஈழத்தமிழ்க்கலைஞர்ஒன்றியம்’ இதன் பின்னர் “ஒன்றியம்” எனக் குறிப்பிடப்பெறும்.

2. அலுவலக முகவரி

சங்கத்தின் பதிவு பெற்ற அலுவலகம் இல. 330, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளது.

3. குறிக்கோள்கள்

  • (அ) ஈழத்துக் கலைகளை சமூக ஆரோக்கியத்துக்கான மக்கள் கலைகளாக மெருகேற்றி வளர்த்தல்.

  • (ஆ) கலைகளினூடாக மானுட விடுதலையையும் சுதந்திரத்தையும் சமத்துவ நெறியையும் அடிப்படையாகக் கொண்ட புதிய தமிழ்ப் பண்பாட்டு உருவாக்கத்திற்காகப் பணியாற்றுதல்.

  • (இ) கலைகளினூடாகச் சுற்றாடலைப் பசுமைப்படுத்தலும் பாதுகாத்தலும்.

  • (ஈ) கலைகளினூடாக மானுட விழுமியங்களை மேம்படுத்தல்.

  • (உ) கலைகளினூடாகச் சமூக நீதியை நிலை நாட்டுதல்.

  • (ஊ) சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தல்.

  • (எ) தேசிய, சர்வதேச மட்டத்தில் கலைஞர்களுடன் ஒருங்கிணைந்து இயங்குதல்.

  • (ஏ) பால் நிலைச் சமத்துவத்தைப் பேணுதல்.

  • (ஐ) கலைகளினூடாக மாணவர்களின் ஆளுமை விருத்திக்கும் கல்வி வளர்ச்சிக்கும் உதவுதல்.

குறிக்கோள்களை நிறைவேற்றும் வழிமுறைகள்

  • மக்கள் கலைப் படைப்பாக்கங்களை ஊக்குவித்து உருவாக்கலும் அவற்றை மக்கள் மத்தியில் பரப்புதலும் மக்களின் அழகியற் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலும்.

  • இசைநிகழ்வு, ஓவியக்கண்காட்சி, கருத்தரங்கு, ஆய்வரங்கு, கலந்துரையாடல், கூட்டம், பயிலரங்கு, கூட்டுப்படிப்பு, கவியரங்கு, விவாத அரங்கு போன்றவற்றை நடாத்துதல்.

  • திரைப்படங்கள், நாடகங்கள், இசை நிகழ்வுகள், கலை விழாக்கள் ஆகியவற்றை ஒழுங்கு செய்தல்.

  • கலைஞர்களுக்கான போட்டிகளை நடாத்துதலும் பரிசுகள் வழங்குதலும்.

  • ஒலி, ஒளிப் பேழைகள், குறும்படங்கள், சினிமா ஆகியவற்றைத் தயாரித்தலும் காண்பித்தலும் தரமான கலைப்படைப்புகளை ஊக்குவித்தலும்.

  • கலைஞர்களை ஊக்கப்படுத்தலும், கௌரவித்தலும்.

  • கலைஞர்களின் விபரக்கோவையை ஆவணப்படுத்தல்.

  • பாரம்பரியக் கலைப்படைப்புக்களை வளர்த்தலும் பாதுகாத்தலும், கௌரவப்படுத்தலும், ஊக்கப்படுத்தலும்.

  • கலை ஆர்வலர்களின் வலையமைப்பைத் தேசிய சர்வதேச மட்டத்தில் உருவாக்குதலும் ஊக்குவித்தலும்.

  • மாற்றுத் திறனாளிக் கலைஞர்களை இனம் காணுதலும் ஊக்குவித்தலும்.

முகாமைத்துவக்குழு

ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் மத்திய நிறைவேற்றுக்குழு தேசிய மாநாட்டில் தெரிவு செய்யப்படும் பின்வரும் பதவி தாங்குனர்களை உள்ளடக்கியதாக அமையும்:

  • தலைவர்

  • துணைத்தலைவர்கள் – 3 பேர்

  • பொதுச் செயலாளர்

  • இணைத் துணைச் செயலாளர்கள் – 2

  • பொருளாளர்

  • துணைப் பொருளாளர்

  • ஆவணக் காப்பாளர்

  • துணை ஆவணக் காப்பாளர்

  • விநியோகப் பொறுப்பாளர்

  • துணை விநியோகப் பொறுப்பாளர்

  • கலை மே்பாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் – 2

  • பிராந்தியக்குழுத் தலைவர்கள்

  • குழு உறுப்பினர்கள் – 5

பதவி தாங்குநர்கள் தெரிவு

பதவி தாங்குநர்களின் தெரிவு தேசிய மாநாட்டில் இடம்பெற வேண்டும். தெரிவு செய்யப்படும் பதவி தாங்குநர்கள் அடுத்த தேசிய மாநாடு மூன்று வருடத்தில் கூட்டப்படும் வரை பதவி வகிக்க வேண்டும். எவரேனும் பதவி தாங்குநர் அல்லது குழு உறுப்பினர் மரணமடைவதாலோ அல்லது விலகுவதனாலோ வெற்றிடம் ஏற்பட்டால் அவற்றை நிரப்புவதற்கு மத்திய குழுவுக்குத் தத்துவம் உண்டு.

தத்துவம்

  • (அ) ஈழத்தமிழ்க்கலைஞர் ஒன்றியத்தின் குறிக்கோள்களை எய்துவதற்கான வசதிகளையோ அவசியமானவற்றையோ மேற்கொள்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், நியமங்கள், ஒழுக்காற்றுக்கள் என்பவற்றுக்கேற்ப ஒன்றியத்தின் மத்திய நிறைவேற்றுக்குழு தத்துவங்களைக் கொண்டிருக்கும்.

  • (ஆ) தேசிய மாநாட்டின் மூலம் ஒதுக்கப்பட்டோ அல்லது நபர்களின் சபைக்கோ அல்லது வேறு எவரேனும் நபருக்கோ விசேடமாக வழங்கப்பட்டோ உள்ளவை தவிர்ந்த ஏனைய தத்துவங்களை மத்திய நிறைவேற்றும் குழு பிரயோகிக்க முடியும்.

  • (இ) தேசிய மாநாட்டில் பொது அங்கத்துவத்தினால் மத்திய நிறைவேற்றுக்குழுவின் தத்துவங்கள் மீது மட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.


அங்கத்துவம்

(அ) தகைமை

ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் நோக்கங்களை ஏற்றுக்கொண்டு அமைப்பு விதிகளுக்குக் கட்டுப்பட்டு ஒழுக முன்வரும் 18 வயதுக்கு மேற்பட்ட கலைஞர் எவரும் ஒன்றியத்தின் உறுப்பினராகத் தகுதியுடையவராவர்.

(ஆ) விதிகளுக்கியைந்து ஒழுகுதல்

காலத்துக்குக் காலம் ஒன்றியத்தினால் திருத்தப்படும் இவ்விதிகளுக்கும் 12ஆம் பிரிவின் (எ ) உட்பிரிவின் கீழ் விபரிக்கப்படும் துணைவிதிகளுக்கும் உறுப்பினர்கள் அனைவரும் இசைந்து ஒழுகுதல் வேண்டும்.

இவ் ஒன்றியம் தேர்தல் அரசியலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட முடியாது. சாதாரண அங்கத்தவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடமுடியும். ஆனால் ஒன்றியத்தின் பொறுப்பில் உள்ளவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் அரசியலில் ஈடுபடவிரும்பின் ஒன்றியத்துக்கு அறிவித்து தமது பொறுப்புக்களிலிருந்து விலகிய பின்னர் சாதாரண அங்கத்தவராக இருந்து கொண்டு தேர்தல் அரசியலில் ஈடுபடலாம். ஒன்றியத்தின் பெயரைத் தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்த முடியாது.

(இ) பதிவு செய்தல்

புதிதாகச் சேரவிரும்பும் ஒருவர் கலைத்துறையில் ஆகக் குறைந்தது மூன்று (3) வருடமேனும் ஈடுபாடுள்ளவராக இருந்திருத்தல் வேண்டும். அவர் ஒன்றியத்தின் அங்கத்தினர் விண்ணப்பப் படிவத்தை உரிய முறையில் பூரணப்படுத்திப் பிராந்தியக் குழுத்தலைவர் ஊடாகப் பொதுச் செயலாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும். பிராந்தியத்தின் விதப்புரையின் அடிப்படையில் மத்திய நிறைவேற்றுக் குழுவின் அங்கீகாரத்துடன் அங்கத்துவம் உறுதி செய்யப்படும்.

(ஈ) பொறுப்புகள்

  • (i) உறுப்பினர் ஒவ்வொருவரும் உறுப்பாண்மைப் பணத்தைப்பிராந்தியக்குழுப் பொருளாளரூடாகச் சேர்ப்பித்தல் வேண்டும். வருட சந்தா செலுத்தத் தவறும் ஒருவர் தானாக அங்கத்துவத்தை இழந்தவரெனக் கருதப்படுவர்.

  • (ii) ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு வாக்குரிமையுடையவராக இருத்தல் வேண்டும்.

  • உறுப்பினர் கூட்டம் ஒன்றில் தானாக வாக்களிக்கும் உரிமையைக் கொண்டிருப்பார்.

9. அங்கத்துவப் பணம்

உறுப்பாண்மைக்குரிய சந்தாப் பணம் காலத்துக்குக் காலம் மத்திய நிறைவேற்றுக்குழுவினால் தீர்மானிக்கப்படும்.

  • ஒவ்வொரு அங்கத்தவரும் வருடாந்தம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்பதாக ரூ. 1000.00 (ஆயிரம்) ஐ சந்தாவாகச் செலுத்தவேண்டும்.

  • உறுப்பினராகத் தகுதியுடையவர் எவரும் ரூ. 10,000 (பத்தாயிரம்) செலுத்தி ஆயுட்கால உறுப்பினராக இணைந்து கொள்ளலாம்.

10. அங்கத்துவத்தை நீக்குதல்

ஒன்றியத்தின் நோக்கங்களுக்கும் அமைப்பு விதிகளுக்கும் விரோதமாக உறுப்பினர் செயற்படுவதை அவரது பிராந்தியக்குழுவின் 2/3 பங்கினர் உறுதிப்படுத்தும் விசேட தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் மூலம் அவரது அங்கத்துவம் இல்லாமல் செய்யப்படும்.

மேலே குறிப்பிட்டபடி அங்கத்துவம் இல்லாமலாக்கப்பட்டுள்ளமையை உரியவருக்குத் தெரியப்படுத்தி, இரு வாரங்களுக்குள் பொதுச் செயலாளருக்கு பிராந்தியச் செயலாளரால் அறிவிக்கப்பட வேண்டும். இவ்விலக்கல் கட்டளையை மறுபரிசீலனை செய்யும்படி கோருவதாயின் உரியவர் ஒரு மாதத்தினுள் பொதுச் செயலாளருக்கு விண்ணப்பித்தால் மத்திய நிறைவேற்றுக்குழு ஒழுக்காற்றுக்குழு ஒன்றை நியமிக்க அவ்வொழுக்காற்றுக்குழு விசாரணைகளை மூன்று மாதங்களுக்குள் நிறைவாக்கி முடிவைப் பொதுச் செயலாளருக்கும் உரியவருக்கும் பிராந்தியக்குழுவுக்கும் அறிவிக்க வேண்டும். ஒழுக்காற்றுக்குழுவின் முடிவை ஒவ்வொரு அங்கத்தவரும், பிராந்தியக்குழுவும் இறுதித் தீர்வாக ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

சந்தாப்பணம் செலுத்தாமைக்கான தண்டம்

எட்டாம் (ஆ) பிரிவுக்கமைவாகக் குறித்துரைக்கப்பட்ட காலத்துக்குள்ளாகத் தமது உறுப்பாண்மைச் சந்தாவைச் செலுத்தத் தவறுகின்ற சாதாரண உறுப்பினர் ஒருவர் அத்தகைய காலப்பகுதி முடிவடைந்து அடுத்துவரும் நாளன்று தொடங்கி உறுப்பாண்மைக்கான சகல உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் இழந்துவிடுவார்.

உறுப்பாண்மையை மீண்டும் பெறுதல்

  • (அ) தமது சந்தாப் பணத்தைக் கொடுக்காமையினால் உறுப்பாண்மையை இழந்தவர்கள் தாங்கள் கொடுக்க வேண்டிய சந்தாப்பண நிலுவைகளையும் நிகழ்காலத்திற்குரிய சந்தாப் பணத்தையும் கொடுத்து மீண்டும் உறுப்பாண்மை பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

  • (ஆ) இவ்வாறு கொடுக்கப்பட்ட பணத்தைப் பற்றி அடுத்துவரும் மத்திய நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் பொருளாளர் அறிவிக்க வேண்டும். விண்ணப்பம் செய்தவரை உறுப்பினராகத் தெரிவு செய்யாமல்விடவோ, தெரிவு செய்வதற்கு முன் மேலதிகமாகப் பணம் கொடுக்க வேண்டுமென்று பணிக்கவோ மத்திய நிறைவேற்றுக்குழுவிற்கு உரிமையுண்டு.

விலகுதல்

ஒன்றியத்திலிருந்து விலகவிரும்பும் உறுப்பினர் தம்முடைய கருத்தைப் பொதுச் செயலாளருக்கு எழுத்தில் அறிவித்தல் வேண்டும். பொதுச் செயலாளர் அவருடைய கடிதத்தை மத்திய நிறைவேற்றுக்குழுவில் சமர்ப்பித்தல் வேண்டும். மத்திய நிறைவேற்றுக் குழு இதனை ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து அந்த உறுப்பினர் தமது உறுப்புரிமையை இழந்தவராகக் கொள்ளப்படுவார். ஒன்றியத்திலிருந்து விலகியவர் தமது உறுப்பாண்மைப் பணத்தின் எப்பகுதியையேனும் திருப்பிப் பெறல் முடியாது.


கூட்டங்கள்

(அ) பிராந்தியக் குழுக்கள்

தேசிய மாநாட்டில், ஒன்றியத்தின் பிராந்தியங்கள் ஒவ்வொன்றுக்கும் பிராந்திய செயற் குழுக்களைத் தெரிவு செய்ய வேண்டும். இப்பிராந்திய செயற்குழுவுக்கான ஒரு தலைவரையும் ஒரு செயலாளரையும் ஒரு பொருளாளரையும் இம் மாநாடு தெரிவு செய்து கொள்ளும். இம்மூவர் உட்பட ஒன்பது (9) பேர் கொண்ட பிராந்தியக்குழுவும் இம் மாநாட்டில் தெரிவு செய்யப்படும். பிராந்தியத்தின் செயற்குழுவும் மாதம் ஒரு தடவை கூட்டப்பட வேண்டும். பிராந்தியசெயற்குழுவின் கூட்டநிறைவெண் ஐந்து (5) ஆகும். கலைமேம்பாட்டுக்காக, பிரதேசரீதியாகக் கலைக்குழுக்களை உருவாக்குவதற்கான தத்துவத்தைக் கொண்டிருக்கும்.

(ஆ) தேசிய மாநாடு

மூன்று வருடத்திற்கு ஒருமுறை வேலைத் திட்டங்களை செயற்படுத்தவும் திருத்தியமைக்கவும் அல்லது நோக்கங்களை தெளிவுபடுத்தவும் கூட்டப்படும். தேசிய மாநாட்டினால் புதிதாக அமைக்கப்படும் மத்திய நிறைவேற்றுக்குழு அங்கீகரிக்கப்பட வேண்டும். அடுத்த தேசிய மாநாடு இடம்பெறும்வரை மாநாட்டினால் திருத்தியமைக்கப்பட்ட வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கான பொறுப்புக்கள் மத்திய நிறைவேற்றுக் குழுவுக்கு உரியதாகும். ஈழுத்துத்தமிழ்க்கலைஞர் ஒன்றியத்தின் கொள்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிப்பதற்கும் உரிய உயர்ந்த ஒன்றியமாகத் தேசிய மாநாடு அமையப் பெறுதல் வேண்டும்.

தேசிய மாநாட்டுக் கூட்டத்திற்கான நிறைவெண் அறுபது (60) ஆகும்.

பின்வரும் பிராந்தியச் செயற்குழுக்கள் அமைக்கப்படும்: கொழும்பு, மலையகம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை. புதிய பிராந்தியச் செயற்குழு ஒன்று உருவமைத்து தேசிய மாநாட்டின் அறிவிப்பின்படி ஒழுங்கு செய்ய வேண்டும்.

மத்திய நிறைவேற்றுக் குழுவின் கடமைகள்

  • 21 பேர் கொண்ட ஆலோசனைக்குழுவை அமைத்து அதன் ஆலோசனைப் பெற்றுக்கொள்ளுதல்.

  • ஒன்றியத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு வேண்டிய பணத்தையும் பொருட்களையும் சேகரித்தல்.

  • ஒன்றியத்தின் வளர்ச்சிக்குரிய பணிகளை மேற்கொண்டு நடாத்துதல்.

  • ஒன்றியத்தின் ஆதனத்தைக் காத்துப் பேணி நிர்வகித்தல்.

  • ஒன்றியத்தின் பணத்திலிருந்து தேவையான தொகையை செலவு செய்ய இசைவளித்தல்.

  • ஒன்றியத்தின் பணிகளைக் கொண்டு நடாத்துவதற்குத் தேவையான பணியாளர்களை நியமித்தல். தேவைப்பட்டால் விலக்குதல், தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் முதலியன.

  • ஒன்றியத்தின் விதிகளுக்கு முரண்படாத வகையில் துணைவிதிகளை ஆக்குதல். இத்துணைவிதிகளை அடுத்து வரும் தேசிய மாநாட்டில் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பித்தல் வேண்டும்.

  • ஒன்றியத்தின் எந்தவொரு விசேட பணிகளையும் முன்னெடுத்துச் செய்வதற்கோ அல்லது அத்தகைய பணிகளைப் பற்றி அறிக்கை தயாரிப்பதற்கோ துணைக்குழுக்களைத் தெரிவு செய்தல்.

  • அவசியமான விசேட பணிகளை ஆற்றுப்படுத்துவதற்குத் தேவையான அலுவலர்களையும் பணியாட்களையும் நியமனம் செய்தல்.

  • புதிய பிராந்திய செயற்பாட்டுக்குழு உருவாக்குதலும் அங்கீகரித்தலும்.


பிராந்தியச் செயற்குழுவின் கடமைகள்

  • தமது பிரதேசத்திலுள்ள கலைஞர்களை அங்கத்தவர்களாக ஒன்றியத்தில் இணைத்தல்.

  • தத்தம் பிரதேசங்களிலுள்ள கலைஞர்களின் தேவைகளை அறிந்து மத்திய நிறைவேற்றுக் குழுவுக்கு அறிக்கையிடல்.

  • பிராந்திய செயற்குழுச் சேகரிக்கும் வருடச் சந்தாப் பணம் மற்றும் ஆயுட் சந்தாப் பணம் ஆகியவற்றை ஒரு வாரத்தினுள் ஈழத் தமிழர் கலைஞர் ஒன்றியத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட வேண்டும். இதில் ஐம்பது சதவீதம் (50%) அந்தந்தப் பிராந்தியங்களுக்கு ஒதுக்கப்படும்.

  • மத்திய நிறைவேற்றுக் குழுவின் அனுமதியுடன் பிராந்தியக் குழுக் கலைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள், நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை முன்னெடுக்க வேண்டும்.

  • பதவி வெற்றிடம் ஒன்று ஏற்படும் பட்சத்தில் மத்திய குழுவின் ஆலோசனையுடன் பிராந்தியக் குழு புதிதாக ஒருவரைத் தெரிவு செய்யமுடியும்.


தலைவருக்குரிய கடமைகள்

  • (i) தலைவர் பொதுவாக ஒன்றியத்தின் பணிகள் எல்லாவற்றையும் மேற்பார்வை செய்து வழிகாட்டுதல் வேண்டும். அத்துடன் அதன் நன்மையையும் கௌரவத்தையும் காப்பாற்றுவதற்கு அவசியமான எல்லாக்காரியங்களையும் செய்தல் வேண்டும்.

  • (ii) ஒன்றியத்தின் ஒவ்வொரு காரியம் தொடர்பாகவும் இந்த அமைப்பு விதிகளுக்கும் ஏற்பாடுகளுக்கும் இணங்கி ஒழுகப்படுவதனை அவர் உறுதிப்படுத்த வேண்டும்.

  • (iii) அவசர விடயங்களின் மீது முடிவெடுப்பதற்குத் தாமதமின்றி மத்திய நிறைவேற்றுக் குழுவின் அங்கத்தவர்களை நாடுவதற்கும் அவருக்கு உரித்துண்டு. எவ்வாறாயினும் அத்தகைய முடிவு அங்கீகரிக்கப்படாவிட்டால் அதன்கீழ் செய்யப்படும் செயல் எதுவும் செல்லுபடியாகாது.

  • (iv) பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக அவர் மறுத்தாலொழிய ஒன்றியத்தின் மத்திய நிறைவேற்றுக் குழுவின் பொதுக்கூட்டங்களில் தலைமை தாங்க வேண்டும்.

  • (ஆ) சொல்லப்பட்ட பணிகளைப் புரிவதற்குத் தலைவரின் உடலியலாமை அல்லது இலங்கையில் இல்லாதபோது மத்திய நிறைவேற்றுக் குழுத் துணைத்தலைவர்களில் ஒருவரை அப்பணிகளை ஆற்றத் தற்காலிகமாக நியமிக்க வேண்டும்.

பொதுச் செயலாளர் கடமைகள்

  • ஒன்றியத்தின் கூட்டங்களைக் கூட்டுதல். அவற்றின் நிகழ்ச்சிகளை எழுதி வைத்தல்.

  • ஒன்றியத்தின் சகல ஆவணங்களையும், ஆதனங்களையும் பாதுகாத்தல்.

  • ஒன்றியத்தின் பணியாளர்களின் வேலைகளை மேற்பார்வையிடல்.

  • குழுக்களின் வழிகாட்டுதல்களின் படி ஒன்றியத்தின் அலுவல்களை நடாத்துதல்.

  • மத்திய நிறைவேற்றுக் குழுவின் கட்டளைப்படி ஒன்றியத்தின் சார்பாக கடிதப் போக்குவரத்துச் செய்தல்.

  • ஒன்றியத்தின் குறிப்பேடுகளையும் பழைய கணக்கேடுகளையும் பொருளாளருக்குத் தேவைப்படாத கணக்கேடுகளையும் பிற பத்திரங்களையும் பேணி வைத்திருத்தல்.

  • ஆண்டுத் திரட்டினை ஒன்றியத்தின் பதிவாளருக்கு அனுப்புதல்.

  • ஊடகங்களுக்கான அறிக்கைகளைத் தயாரித்தல், வெளியிடுதல், விநியோகித்தல்.

  • சகல கூட்டங்களுக்கும் வருகை தருதல் என்பதுடன் அக்கூட்டங்களின் குறிப்புகளைப் பதிவு செய்தல் வேண்டும்.

  • சகல அறிக்கைகளையும் தயார் செய்து எல்லோருடனும் தொடர்புகளை ஏற்படுத்துவதுடன் உறுப்பினர்களுக்குச் சுற்று நிருபத்தினையும் அனுப்புதல் வேண்டும்.

  • தேசிய மாநாட்டிலும் மத்திய நிறைவேற்றுக் குழுவிலும் எடுக்கப்படும் தீர்மானங்களின்படி செயற்பட வேண்டும் என்பதுடன் பொது நிர்வாகத்திற்கும் அவரே பொறுப்புதாரியாவார்.

  • பொதுச் செயலாளர் ஒன்றியத்தின் பணிமனையில் குறிப்பிட்டதும் பொதுவானதுமான நிர்வாகத்திற்குப் பொறுப்புடையவராக இருக்க வேண்டும்.


பொருளாளரின் கடமைகள்

  • மத்திய நிறைவேற்றுக்குழு வழிப்படுத்தியவாறு பிராந்தியத்தின் பணத்தைச் சேர்த்தல், பாதுகாப்பாக வைத்திருத்தல், செலவு செய்தல்.

  • மத்திய நிறைவேற்றுக்குழு அளித்த அதிகாரத்தின்படி ஒன்றியத்தின் பணத்தை ஒரு வங்கியிலேனும் அல்லது பல வங்கிகளிலேனும் வைப்புப் பணமாக வைத்திருத்தல்.

  • வரவு செலவுகள் யாவற்றுக்கும் சரியான முறையிலே கணக்குகள் எழுதி வைத்திருத்தல்.

  • ஒன்றியத்தின் சகல பணியாளர்களுக்கும் கொடுக்க வேண்டிய சம்பளம் முதலியவற்றை உரிய காலத்தில் கொடுத்துச் சம்பள இடாப்பில் அவர்கள் இவற்றைப் பெற்றுக் கொண்டதற்கு அறிகுறியாக அவர்களின் கையொப்பங்களைப் பெறுதல்.

  • சட்டப்படியான சகல கொடுப்பனவுகளையும் (ஊ.சே.நி., ஊ.ந.நி, வரிகள் போன்றவற்றை) காலந்தாழ்த்தாது கொடுத்தல்.

  • ஒன்றியத்தின் கணக்குப் பரிசோதகர்களுக்கு கணக்கு பார்க்க வேண்டிய உதவிகளைச் செய்தல்.

  • ஒன்றியத்தின் செயற்பாட்டுப் பகுதி ஒவ்வொன்றிற்கும் பொறுப்பாக உள்ளவர்களிடமிருந்து மாத வரவு செலவுத் திரட்டுகளையும் பற்றுச் சீட்டுகளையும் பெறுதலும், அவர்களிடமிருந்து ஒன்றியத்திற்கு வரவேண்டிய பணத்தைச் சேர்த்தலும்.

  • முந்தைய மாதக் கணக்குகளை மத்திய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்தல்.

  • தேவையான கணக்கேடுகளைத் திறந்து முறையாக வைத்திருத்தல், அவற்றை பாதுகாப்பாக வைத்தல், கணக்குகளுடன் தொடர்புபட்ட முக்கிய கடிதங்களைக் கோப்பிடல்.

  • வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல்.

  • ஆண்டுக் கணக்கு அறிக்கை தயாரித்தலும் மத்திய நிறைவேற்றுக் குழுவிலும் தேசிய மாநாட்டிலும் சமர்ப்பித்தலும்.


ஆவணக் காப்பாளரின் கடமைகள்

  • ஆவணங்களைப் பாதுகாத்தலும் அவற்றுக்குப் பொறுப்பாக இருத்தலும்.

  • ஆவணக் காப்பகத்திற்குப் பொறுப்பாக இருத்தலும், பத்திரிகைகள் வெளியீடுகள், புத்தகங்கள் முதலிவற்றை வாங்குதலும் கொடுத்தலும் அவற்றைப் பேணிப் பாதுகாத்து வைத்தலும்.

  • ஈழத்தமிழ்க் கலைஞர்களின் விபரத்திரட்டுச் சேகரித்தலும், பாதுகாத்தலும்.

  • மத்திய நிறைவேற்றுக் குழுவின் கட்டளைப்படியும், அஃது ஆக்கும் உபவிதிகளின் படியும் இவர் தமது கடமைகளை ஒன்றியத்தில் நிறைவேற்ற வேண்டும்.

  • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 வரை கிடைக்கப்பெற்ற ஆவணங்களை இரண்டு மாத காலத்துக்குள் சமர்ப்பித்தல்.

  • அரும்பொருட்களைச் சேகரித்தல். அவற்றைப் பேணிப் பாதுகாத்தல்.


கலைமேம்பாட்டு ஒருங்கிணைப்பாளரின் கடமைகள்

  • பயிற்சிப்பட்டறைகளை ஒழுங்கு செய்தல்.

விநியோகப் பொறுப்பாளரின் கடமைகள்

  • விநியோகச் செயற்பாடுகளை ஒன்றிணைத்தல்.

  • ஒன்றியத்தின் வெளியீடுகள், சஞ்சிகைகள், இலங்கை, இந்திய புலம் பெயர்ந்த பிற கலைஞர்களின் வெளியீடுகள் என்பவற்றை கொள்முதல் செய்து அவற்றை விநியோகிப்பதற்கான வழிகளைத் தோற்றுவித்துச் செயற்படுத்தல்.

  • விநியோக வலையமைப்பை உருவாக்கி அவற்றிடையே சீரான ஒழுங்கைப் பேணிப் பாதுகாத்தல்.

  • விநியோகம் மூலம் பெறப்படும் பணக் கொடுப்பனவுகளை முறையாகப் பேணி இரு வாரங்களுக்குள் பொருளாளரிடம் சேர்ப்பித்தல்.

கூட்டம் நடாத்துதல்

கூட்டங்களைப் பற்றிய பொது விதிகள்

  • (அ) கூட்டத்தில் முடிவு செய்யப்படும் விடயங்கள் யாவும் பெரும்பான்மையான வாக்குகளை பெறுதல் வேண்டும்.

  • (ஆ) உறுப்பினர்கள் தங்கள் கைகளை உயர்த்திக் காட்டுதல் மூலம் பொதுவாகத் தங்கள் வாக்குகளை அளிக்கலாம். இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று உறுப்பினர் யாரேனும் ஒருவர் வேண்டிக் கொண்டால், தலைவர் அதன்படி நடக்கக் கடமைப்பட்டுள்ளார்.

  • (இ) ஒன்றியத்தின் அமைப்பு விதிகளை மாற்றவும் நீக்கவும் கூட்டவும் தேசிய மாநாட்டிற்கு உரிமை உண்டு. மாற்றங்கள் சங்கங்களின் பதிவாளருக்கு அறிவிக்கப்பட்டு பதியப்பட்ட பின்னரே செல்லுபடியாகும்.

  • (ஈ) ஒன்றியத்தின் அமைப்பு விதிகளை, உரிமைகளை பொருள் வியாக்கியானம் செய்வதில் அல்லது ஒன்றியத்திற்கும், உறுப்பினருக்கும் அல்லது உறுப்பினருக்கூடாக நாடுவோருக்கும் எழும் பிணக்குகளை மத்திய நிறைவேற்றுக்குழு முடிவு செய்யும். மத்திய நிறைவேற்றுக்குழுவின் முடிவுகளை மாற்றுவதற்கு தேசிய மாநாட்டிற்கு உரிமை உண்டு.

  • (உ) தேசிய மாநாட்டில் பங்குபற்றி வாக்களிப்போரில் 2/3 பங்கினர் உடன்பட்டால் அன்றி அமைப்பு விதிகளைப் பாதிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றுதல் முடியாது.

நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை

  • (அ) ஒன்றியத்திற்கு ஐந்து (5) உறுப்பினர்களைக் கொண்ட நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை ஒன்றிருத்தல் வேண்டும்.

  • (ஆ) ஒன்றியத்தின் உறுப்பினர் மட்டுமே சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப் பெறமுடியும்.

  • (இ) சபையின் உறுப்பினர்கள் தேசிய மாநாட்டில் தெரிவு செய்யப்பெற வேண்டும்.

  • (ஈ) சபையின் உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒரு தவிசாளர், துணைத் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரைத் தெரிவு செய்வர்.

  • (உ) சபையின் உறுப்பினர்கள் மூன்று வருட காலத்துக்குப் பதவி வகிப்பார்.

  • (ஊ) சபையின் உறுப்பினர் ஒருவர் ஒன்றியத்தின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்து எந்நேரத்திலும் தனது பதவியைத் துறக்கலாம்.

  • (எ) மத்திய நிறைவேற்றுக் குழுவின் விதப்புரையின் பேரில், தேசிய மாநாட்டில் வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் 2/3 பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப் பெற்ற தீர்மானத்தின் மூலம் சபையின் எந்த உறுப்பினரும் பதவியிலிருந்து அகற்றப்படலாம்.

  • (ஏ) சபையில் வெற்றிடம் எதுவும் ஏற்பட்டால், வெற்றிடம் ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்குள் மத்திய நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் செய்யப்படும் நியமனத்தினால் நிரப்பப்படும்.

  • (ஐ) உடலியலாமை அல்லது இலங்கையில் இல்லாமை ஆகிய காரணங்களுக்காகச் சபையின் உறுப்பினர் ஒருவர் தற்காலிகமாகத் தனது பதவிக்கான கடமைகளை ஆற்றவியலாதவிடத்து மத்திய நிறைவேற்றுக் குழு அவரது இடத்திற்குப் பதில் கடமையாற்ற வேறொருவரைத் தெரிவு செய்யலாம்.

  • (ஒ) தனது காலத் தவணை முடிவில் பதவியிலிருந்து ஓய்வுபெறும் உறுப்பினர் ஒருவர் மீள்தெரிவு செய்யப்படுவதற்குத் தகுதியுடையவராவர்.

  • (ஓ) சபையின் உறுப்பினர் ஒருவரின் நியமனத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தாலும் சபையின் செயல்பாடு வலிதற்றதாகாது.

  • (ஔ) சபையின் எந்தக் கூட்டத்துக்கும் நிறைவெண் மூன்றாகும்.

  • தவிசாளர் அல்லது அவர் இல்லாதவிடத்துத் துணைத் தவிசாளர் சபையின் கூட்டத்துக்கு தலைமை தாங்குவார்.

  • (ஃ) சபையின் தீர்மானங்கள் அக்கூட்டத்திற்கு வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளினால் முடிவு செய்யப்படும். வாக்குகள் சமமாக இருக்கும் பட்சத்தில் தலைமை தாங்குபவருக்கு அறுதியிடும் வாக்கு ஒன்றுண்டு.

சபை கொண்டுள்ள தத்துவங்கள்:

  • (அ) கொள்வனவு, நன்கொடை, மரணசாதன உரிமை மாற்றம் முதலிய வழியில் அல்லது வேறு வழியில் ஒன்றியத்தின் பெறும் அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனங்களை ஒன்றியத்தின் சார்பில் கைக்கொள்ளவும் கொண்டிருக்கவும்.

  • (ஆ) ஒன்றியத்தின் எந்த ஆதனங்களையும் விற்பனை செய்யவும், ஈடுவைக்கவும், வாடகைக்கு விடவும், குத்தகைக்குக் கொடுக்கவும், பரிமாறவும் வேறு வழியிற் பயன்படுத்தவும்.

  • (இ) தனது கருத்தின் படி தகுதியெனக் காணும் அளவிலும் முறையிலும், விதிகள் நிபந்தனைகளுக்கு ஏற்பவும் ஒன்றியத்தின் தேவைகளுக்காகக் காலத்திற்குக் காலம் அதன் பணம், கடன் அதன் பொருட்டுப் பிணைகள், உண்டியல்கள், வாக்குறுதிச் சீட்டுகள், தொகுதிக் கடன் முறிகள், உறுதிகள் ஏனைய ஆவணங்கள் என்பவற்றை வழங்கவும் அதிகாரமுண்டு.

  • (ஈ) எனினும் சபைக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைச் சபை, மத்திய நிறைவேற்றுக் குழுவின் ஒருங்கிசைவின்றி நிறைவேற்றுதலாகாது.

  • (உ) ஒன்றியத்தில் ஆக்கப்பெறும் ஆவணங்கள் யாவும் ஒன்றிய பொதுச் செயலாளரின் பொறுப்பில் இருக்கும்.

  • (ஊ) ஒன்றியத்தின் தலைவர் சபையின் பதவிவழி உறுப்பினராக இருப்பார்.

  • சபைச் செயலாளரினால் கூட்டப்படும் எல்லாக் கூட்டங்களிலும், அவ்வாறு செய்யுமாறு வரவழைக்கப்பட்டால், பொதுச் செயலாளர், பொருளாளர், ஏனைய பதவி தாங்குனர் சமுகமாக இருக்க முடியும்.

வங்கிக் கணக்குகள்

ஒன்றியத்தின் வங்கிக் கணக்குகள் தலைவராலும், பொருளாளராலும் கூட்டாக நிர்வகிக்கப்படும். தலைவர் சமூகமளிக்காத பட்சத்தில் மத்திய நிறைவேற்றுக் குழு நியமிக்கும் துணைத்தலைவர் ஒருவர் செயல்படுவார்.

சந்தாப்பணம் முதலியவற்றில் உரிமை கோரல்

ஒன்றியத்திற்கு முற்பணமாக கொடுக்கப்பெற்ற சந்தாப்பணத்திலோ, பணக்கொடையிலோ, பிற நன்கொடைகளிலோ உரிமை கோருவதற்கு எவருக்கும் உரிமை இல்லை.

நிதி மீளாய்வு மதியுரைக் குழு

  • (அ) சபையானது ஆண்டு தோறும் நிதி மீளாய்வு மதியுரைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும்.

  • (ஆ) இக்குழு, தேசிய மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட இரு உள்ளகக் கணக்காய்வாளர்களையும் சபையினால் நியமிக்கப்படும் ஏனைய மூவரையும் கொண்டிருக்கும். குழுவின் தலைவர் மற்றும் செயலாளர் குழுவினால் தெரிவு செய்யப்பட வேண்டும்.

  • (இ) கணக்காய்வுத்துறையில் அனுபவமுள்ள ஒன்றியத்தின் உறுப்பினர் இக்குழுவுக்கு நியமிக்கப்படலாம்.

  • (ஈ) கணக்குப் புத்தகங்கள் முறையாகப் பேணப்பட்டு வருகின்றனவா எனவும், சமர்ப்பிக்கப்பட்ட கணக்குக் கூற்றுக்கள் செம்மையானவையா எனவும் பரிசீலித்தல்; மாதத்தில் ஆகக் குறைந்தது ஒரு தடவை சபைக்கு அறிக்கை சமர்ப்பித்தல்; பின்வரும் கருமங்கள் தொடர்பில் காலத்துக்குக் காலம் சபைக்கு அறிக்கைகள் சமர்ப்பித்தல் இக்குழுவின் கடமைகளாதல் வேண்டும்:

    • சபையின் விதிகளுக்கு இணங்காத செலவீனம்.

    • முறைகேடாகச் செய்யப்பட்ட முதலீடு.

    • ஆதனத்தைப் பாதுகாப்பதில் அல்லது பராமரிப்பதில் உள்ள ஒழுங்கீனம்.

    • முறையாகப் பேணப்படாத ஆவணங்களும் ஆதனப் பதிவேடுகளும்.

    • ஒன்றியத்தின் உள்ளகக் கணக்குக் கட்டுப்பாட்டு முறைமையில் கொணரப்படவுள்ள சீர்திருத்தங்கள்.

    • ஒன்றியத்தின் ஆதனம் அல்லது நிதி அலுவல்கள் தொடர்பான எவையேனும் ஒழுங்கீனங்கள்.

  • குழு அறிக்கைகளின் பிரதிகள் மத்திய நிறைவேற்றுக் குழுவுக்கும் பகிரங்கக் கணக்காய்வாளருக்கும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நிதிக் கட்டுப்பாடு

  • (அ) பத்தாயிரம் ரூபாவுக்கும் அதற்கு மேற்பட்ட சகல கொடுப்பனவுகளும் காசோலை மூலம் கொடுக்கப்பட வேண்டும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் ரூ. 25,000 வரையான பணத்தொகை தலைவரின் சம்மதத்துடன் காசாகக் கொடுக்கப்படலாம்.

  • (ஆ) பொருளாளர் இடைநேர் செலவுகளுக்காக இருபத்தையாயிரம் ரூபாவுக்கு மேற்படாத சிறு கைச் செலவுக் காசை வைத்திருக்கலாம்.

  • (இ) பொருளாளர் ஒவ்வோராண்டும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் அடுத்த நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்து மத்திய நிறைவேற்றுக் குழுவினதும், சபையினதும் அங்கீகாரத்தைப் பெறல்வேண்டும்.

  • (ஈ) ஒன்றியத்தின் சார்பில் எச்செலவைச் செய்வதற்கோ, எப்பொறுப்பையேனும் ஆற்றுவதற்கோ, அவ்விடயம் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தாலொழிய அல்லது குறை நிரப்பு மதிப்பீட்டில் மத்திய நிறைவேற்றுக் குழுவினதும் சபையினதும் விசேட அங்கீகாரத்தைப் பெற்றிருந்தாலொழிய அதிகாரம் கொண்டவராகார்.

  • (உ) விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் ஒன்றியத்தின் தலைவரும் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் தவிசாளரும் அதற்கான தமது அங்கீகாரத்தை வழங்கினாலொழிய 25000 ரூபாவுக்கு மேற்படாத செலவீனம் எதுவும் உறுதிப்படுத்தலாகாது.

  • (ஊ) செலவு தொடர்பான எந்த முடிவும் மத்திய நிறைவேற்றுக் குழுவின் சாதாரண பெரும்பான்மை அங்கீகாரமின்றிச் செய்யப்படுதலாகாது. அத்தகைய அங்கீகாரம் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

பதிவாளருக்குரிய திரட்டுக்கள்

ஆண்டு தோறும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் சங்கங்களின் பதிவாளருக்குப் பொதுச்செயலாளர், பின்வருவனவற்றைப் அனுப்புதல்வேண்டும்:

  • (அ) சங்கக் கட்டளைச் சட்டம் (105ம் அத்தியாயம்) பிரிவு 8 (1) (ஈ) என்பதில் குறிக்கப்பட்ட விடயங்களுடன் சங்கக் கட்டளைச்சட்டப்படி நியமிக்கப்பட்ட பகிரங்கக் கணக்காய்வாளரால் பரிசோதிக்கப்பட்ட டிசம்பர் 31ஆம் தேதியில் முடியும் முந்திய ஆண்டுக்குரிய வரவு செலவு, நிதிகள், உடமைகள் முதலியவை பற்றிய திரட்டு.

  • (ஆ) கணக்காய்வாளருடைய அறிக்கையின் ஒரு பிரதி.

  • (இ) டிசெம்பர் 31ஆம் தேதியன்றுள்ளவாறாக ஒன்றியத்தின் உறுப்பினரின் தொகையைக் குறிக்கும் அறிக்கை.

நிதி ஆண்டு

ஒன்றியத்தின் நிதி ஆண்டு வருடாந்தம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மார்கழி மாதம் 31ஆம் திகதி வரையாதல் வேண்டும்.

முதலீடுகள்

மத்திய நிறைவேற்றுக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் அல்லது வங்கிகளின் ஏதேனும் கிளையில் போதிய நிதியை நிரந்தர வைப்பில் மத்திய நிறைவேற்றுக் குழு முதலீடு செய்ய வேண்டும்.